சிவனொளிபாதமலையும், அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களும்
இலங்கையில் பல இறைநேசர்களான அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்கள்
அமைந்திருக்கின்றன. அதேபோல், இலங்கைக்குப் பல அவ்லியாக்கள் ஆதிகாலம்தொட்டு வருகைதந்திருக்கின்றனர். அவ்வகையில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த மத்தியாகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற நாடுகாண் பயணியான இப்னு பதூதா அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள். இப்னு பதூதா தனது இலங்கை விஜயத்தின் போது சிவனொளிபாவாதமலையையும் தரிசித்தார்.இலங்கைக்கு பாவாத மலையினைத் தரிசிப்பதற்காக வேண்டி வந்த புகழ்பெற்ற இறைநேசரான அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) (மரணம் : கி.பி. 982 / ஹிஜ்ரி 371) அவர்களின் கராமத் பற்றி இப்னு பதூதா தனது ரிஹ்லா என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்கள், அவர்களது காலத்தில் பெரும் இறைநேசராக (குத்ப்) கருதப்பட்டார். அவர்கள் ஈரானின், ஷிராஸ் பகுதிக்கு சூபிசத்தை (தஸவ்வுப்) கொண்டு சென்றவராவார். இப்னு பதூதா ஈரானின், ஷிராஸில் தங்கியிருக்கும் போது, அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின்
அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்தார். அவர்களின் அடக்கஸ்தலத்தில், விசேடமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக இப்னு பதூதா கூறியுள்ளார். மேலும், அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹஹுல்லாஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்தை காலையும், மாலையும் மக்கள் சியாரத் செய்து வந்ததாகவும், ஷிராஸின் சுல்தான் அவர்களின் தாயார் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை சியாரத் செய்து வந்ததாகவும் இப்னு பதூதா குறிப்பிடுகின்றார்.
" இலங்கையில் அமைந்துள்ள பாவதமலையைத் தரிசிப்பதற்காகவேண்டி, அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்)அவர்கள், தனது முப்பது சீடர்களுடன் புறப்பட்டார்கள். பின்னர்,அவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும் போது
வழிதவறிவிட்டார்கள். மேலும், பிராயணக் களைப்பினால் அவர்களுக்கு கடுமையான பசி ஏற்பட்டது. பின்னர், அப்பிரதேசத்தில் காணப்பட்ட யானைக் குட்டிகளில் ஒன்றை பிடித்து சாப்பிடுவதற்கு சீடர்கள், அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்கள் தடைவிதித்தார்கள். எனினும், அச்சீடர்களுக்கு கடுமையான பசி ஏற்பட்டபோது, இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் உத்தரவை மீறி, அவற்றில் ஒரு யானையை பிடித்து,அதனைக் கொண்று, அதன் இறைச்சியை சாப்பிட்டார்கள். எனினும், இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அதனை சாப்பிடுவதற்கு மறுத்தார்கள். அந்தநாள் இரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அனைத்து யானைகளும் ஒன்று சேர்ந்து அவர்களிடம் வந்து, அங்கிருந்த ஒவ்வொருவரினது மணத்தை நுகர்ந்து அவர்களைக் கொண்றன. எனினும், இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் மணத்தை நுகர்ந்து அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் செய்யவில்லை. பின்னர், அந்த யானைகளில் ஒன்று, இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களிடம் நெருங்கிவந்து அதன் தும்பிக்கையால் அவர்களை தூக்கி, அதன் முதுகில்வைத்துக் கொண்டது. பின்னர், அந்த யானை மக்கள் வசிக்கின்ற கிராமமொன்றிற்கு அவர்களை கொண்டுவந்தது, இதனைக்கண்ட அந்தக் கிராமவாசிகள் சிலர் அங்கு ஆச்சரியத்துடன் வந்தனர். பின்னர், அந்த யானை அவர்களை மெதுவாக தனது தும்பிக்கையால் எடுத்துக் கீழே வைத்தது. அங்கு வந்த கிராமவாசிகள் செய்க் அவர்களின் மேலங்கியை ஆச்சியரத்துடன் அருள்பெற்றுக்கொள்ளும் நோக்கில் தொட்டனர். பின்னர், செய்க் அவர்களிடம் கதையை கேட்டறிந்து, அவர்களை தமது மன்னரிடம் கூட்டிச்சென்றனர். மன்னர் செய்க் அவர்களை தனது ஒரு விருந்தினாராக மதித்து மரியாதை செய்தார்."
இப்னு பதூதா தனது இலங்கைக்கான விஜயத்தைப் பற்றிக்கூறுகின்றபோது, செய்க் அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் இந்த கராமத் (அற்புதத்தை) சம்பவத்தைத் தொடர்ந்து,அவரது சொந்த அனுபவத்தை இவ்வாறு பதிவுசெய்கின்றார்.
" நாங்கள் அந்த நகரிலிருந்து வெளியேறி, கீழால் நீர் ஓடுகின்ற கரடுமுரடான நிலப்பகுதியில் நடந்தோம். அங்கு அதிகமான யானைகள் காணப்பட்டன. ஆனால்,அவை ஒன்றும் யாத்திரீகர்களுக்கு யாதொரு தீங்கும் செய்யவில்லை. இதற்கான காரணம், செய்க் அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் செல்வாக்காகும். அந்தப் புனித மனிதரே, முதன் முதலில் கால்நடையாகச் செல்வதற்கு இந்தப்பாதையை அமைத்தார். முன்பு, இலங்கைவாசிகள் முஸ்லிம்கள்
பாவாதமலையை தரிசிப்பதற்கு செல்வதை தடுத்தனர். அவர்கள் பாவாதமலைக்கு செல்கின்ற பாதையில் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். அவர்கள், முஸ்லிம் யாத்திரீகர்களுக்கு உணவு வழங்குவோ, அவர்களுடன் பேசவோ இல்லை. செய்க் அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் அந்த அற்புத சம்பவத்திற்குப் பின்னர்,அந்த நாட்டுமக்கள் முஸ்லிம்கள் மீது பெரும் மரியாதை வைத்திருந்தனர். முஸ்லிம்களுக்கு அவர்களது வீடுகளில் தங்கமிட வசதிகளையும், சாப்பாடு வசதிகளையும் செய்துகொடுத்தனர். அவர்கள் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது வைத்துள்ள அதே நம்பிக்கையை முஸ்லிம்கள் மீதும் வைத்திருந்தனர். மேலும், செய்க் அப்துல்லாஹ் இப்னு கபீப் (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களுக்கு, அந்த மக்கள் பெரும் மதிப்புக்கொடுத்து வந்தனர். செய்க் அப்துல்லாஹ் அவர்களை, பெரிய செய்க் என்று அந்த மக்கள் அழைத்தனர்." இப்னு பதூதாவின் ரிஹ்லா என்ற புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மேற்குறித்த சம்பவமானது, ரிஹ்லா நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான Ibn Battuta- Travels in Asia and Africa 1325-1354 (Translated and Selected by H.A.R. Gibb, Page 95-96,256) என்ற புத்தகத்திலும்,The Odyssey of Ibn Battuta: Uncommon Tales of a Medieval Adventurer (Author-David Waines) , Sacred Island: A Buddhist Pilgrim's Guide to Sri Lanka (Author-Shravasti Dhammika) போன்ற நூல்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Leave a Comment