அஷ் ஷெய்கு முஹம்மத் ஹாஜியார் றஹ்மதுல்லாஹி அலைஹி
அஷ் ஷெய்கு முஹம்மத் ஹாஜியார் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கி.பி. 1869(ஹிஜ்ரி 1286) இல் பிறந்தார்கள். வான்மதி போல் திகழும் வட்டமுகம், அடர்ந்த கருநிற தாடி, நீண்ட அங்கியும் தலைப்பாகையுடன் கம்பீரமாக காட்சியளித்தார்கள். விஷேட வைபவங்களுக்கு செல்லும் போது "சத்ரியா" என்று சொல்லும் மேற் சட்டையையும் அணிந்துகொள்வார்கள். கால்கள் இல்லாது மூக்கைப் பற்றிப்பிடிக்கும் மூக்குக் கண்ணாடி அணிவார்கள். அவர்களின் குரல் வன்மை மக்களை பரவசமடையச் செய்தது.
அஷ் ஷெய்கு முஹம்மத் ஹாஜியார் அவர்கள், வெவ்வேறு காலங்களில் ஐந்து திருமணங்களை செய்து கொண்டார்கள். அன்னவர்களின் வேருவிலை மருதானையை சேர்ந்த இரண்டாவது மனைவி தான் "குத்பஸ் ஸமான் அஷ் ஷெய்கு அப்துஸ் ஸமீ: (رحمة الله عليه ) " அன்னவர்களை ஈன்றெடுத்தார்கள்.
மார்க்கப் பயணங்கள் :
அஷ் ஷெய்கு முஹம்மத் ஹாஜியார் அவர்கள் தீனுடைய வேலைகளுக்காக கடல் கடந்து மக்கா,மதீனா,யெமன் ,எகிப்து ,சிரியா,ஈராக்,ஈரான்,பலஸ்தீன்,இந்தியா போன்ற பல நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்கள். இச்சமயத்தில் துருக்கி மன்னர் சுல்தான் அப்துல் ஹமீத் இப்னு அப்துல் மஜீத் கானிடம் {இவர் ஹிஜ்ரி 1293,(கி.பி.1876)ல் பட்டத்துக்கு வந்தார். ஹிஜ்ரி 1328 (கி.பி.1909)வரை ஆட்சி புரிந்தார்.} ஒரு பழமை வாய்ந்த அரும் பெரும் கிரந்தம் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு அதை பார்வையிடுவதற்காக செய்கு நாயகம் துருக்கி சென்றார்கள். ஸுல்தான் நாடாளும் மன்னராக இருந்தாலும் ஒரு ஸாலிஹீனாக இருந்தார்கள். ஸுல்தானை சந்திக்கும் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலில் தங்கினார்கள். வெள்ளிக்கிழமை மன்னர் அரபு குதிரை பூட்டப்பட்ட வண்டியில் வீரர்கள் புடை சூழ பள்ளிக்கு வந்தார். மன்னருக்கு பக்கத்தில் செய்கு நாயகமவர்கள் அமர்ந்தார்கள். தொழுகை முடிந்ததும் நீண்ட நாள் சந்தித்த உறவு போல் மன்னர் செய்கு நாயகத்தை ஆரத்தழுவி சுகம் விசாரித்து அரண்மனைக்கு அழைத்து சென்றார். அங்கு தங்கிய செய்கு நாயகம் அவ்வப் போது மக்களுக்கு அறபோதமும் வழங்கினார்கள். மன்னரிடம் இருந்த நூலை பார்வையிட்ட செய்கு நாயகமவர்கள் அதிலிருந்து குறிப்புகளெல்லாம் எடுத்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பினார்கள்.
காலியில் அஷ் ஷெய்கு முஹம்மத் ஹாஜியார் அவர்கள் :
ஆரம்ப காலங்களில் காலியில் ரபீஉல் அவ்வலில் சுப்ஹான மவ்லித் மஜ்லிஸில் கோபி மாத்திரம் வழங்கப்படும். இறுதியில் அன்னதானம் வழங்கும் நடைமுறை இருக்கவில்லை. வீட்டுக் கந்தூரி என்று சொல்லி வீடுகளில் மவ்லிது ஓதி அன்னதானம் வழங்குவார்கள். காலியில் ஒரு வீட்டுக்கு கந்தூரிக்காக செய்கு நாயகமவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அழைப்பை ஏற்று செய்கு நாயகமவர்களும் அவ்வீட்டுக்கு சென்றார்கள். அவ்வீட்டில் ஏழைகள், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களை வெளியிலும்; பணக்கார்கள், சங்கையானவர்கள் என்று தம்பட்டமடிப்பவர்கள் உள்ளேயும் அமரவைக்கப்பட்டிருந்தது. இது செய்கு நாயகவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் மனம் நொந்தார்கள். செய்கு நாயகமவர்கள் வீட்டின் உள்ளே செல்லாமல் முன் வாசலிலே அமர்ந்து விட்டார்கள். வீட்டுடையவர்கள் எவ்வளவு அழைத்தும் அவர்கள் உள்ளே செல்ல மறுத்து விட்டார்கள். பின்பு தக்கிய்யாவுக்கு வந்து இனிமேல் இங்கேயே அன்னதானம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதன் பின் இன்று வரை ஸுப்ஹான மவ்லிதுக்குப் பின் அன்னதானம் வழங்கப்படுகின்றது.(ஏனெனில் தக்கியாவில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் ஒரே சட்டம் தான். அங்கு எப்பொழுதும் சமத்துவம் பேணப்படும்).
மல்வானையில் கடும் நோய் பரவுதல் :
ஒரு தடவை மல்வானையில் எங்கும் ஒரு வகையான காய்ச்சல் பரவியது.நோயற்ற வீடே இருக்கவில்லை. எல்லா வைத்தியர்களும் முயன்றும் எவ்வித பயனும் கிட்டவில்லை. இறுதியாக ஊர்வாசிகள் வேர்விலைக்கு வந்தார்கள். கண்ணீர் வடித்த கண்களுடன் செய்கு நாயகமவர்களிடம் தம் ஊர் நிலைமையைப் பற்றி முறையிட்டு நோய் நீங்க ஆவன செய்யும் படி வேண்டிக் கொண்டார்கள். செய்கு நாயகமவர்கள் புகாரி கிரந்தத்தை கையில் ஏந்திய வண்ணம் மஹ்மூத் ஆலிமையும் அழைத்துக் கொண்டு மல்வானையை அடைந்தார்கள். அங்கு புகாரி ஓத ஆரம்பித்து வைத்து விட்டு சில நாட்களில் ஊர் திரும்பினார்கள். மஹ்மூத் ஆலிம் 30 நாட்கள் புகாரி ஓதினார்கள். தொட்டிருந்த நோயும் ஊரை விட்டும் அகன்றது.
கோடை நீக்கிய கோமான் :
ஒரு தடவை புகாரி கந்தூரி காலத்தில் பெரும் கோடை ஏற்பட்டிருந்தது. குளங்கள், கிணறுகள் எல்லாம் வற்றி தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டார்கள். கண்தூரிக்கான தண்ணீர் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரிய கந்தூரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உண்டு. என்ன செய்வது, அவ்வளவு தண்ணீர் வெளியில் இருந்து கொண்டு வர முடியுமா ? மத்தியஸ்தர்கள் யோசித்தார்கள். இறுதியாக ஆலோசனை செய்துவிட்டு இது பற்றி செய்கு நாயகமவர்களிடம் முறையிட்டார்கள். செய்கு நாயகமவர்கள் "இது எங்கள் வேலையா ? உங்கள் வேலையா ? நீங்கள் செய்யாவிட்டாலும் மலாயிகாமார்கள் செய்வார்கள்" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று இரண்டு ரக்அத் தொழுது இறைஞ்ச மேகம் இருண்டு மழை பொழிய ஆரம்பித்தது. வற்றிய கிணறுகள் எல்லாம் நிறைந்து வடிந்து ஓடுமளவுக்கு மழை கொட்டியது. வெளியில் சென்று கந்தூரி வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு மழை பொழிந்தது. திரும்ப இதைப் பற்றி மத்தியஸ்தர்கள் முறையிட முன்பு போலவே தொழுது இறைஞ்ச பொழிந்த மழை நின்று மக்கள் அவரவர்களின் வேலைகளில் திறம்பட ஈடுபட்டார்கள்
செய்கு நாயகமவர்கள் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுவதற்க்காக கொழும்பு முகத்துவாரத்தில் டாக்டர் அப்துல் மஜீத் ஹாஜியாரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஒரு நாள் திடீரென அங்கிருந்தவர்களைப் பார்த்து "நாளை என் உயிர் அல்லாஹ்வின் புறமும்; என் உடல் தக்கியா அறைக்கும் சென்று விடும்." என்று சொன்னார்கள். அங்கிருந்தவர்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். உடனே அவர்கள் "மௌத்தைப் பற்றி யாருக்குத் தெரியும். அது மறைக்கப்பட்ட விடயாமாச்சே" என்று அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.ஆனால் சொன்னது போலவே அடுத்த நாள் ஹிஜ்ரி 1331 ,ரபீஉல் ஆகிர், பிறை 22 (கி.பி.1913.மார்ச் மாதம் ,30) ல் தன்னுடைய 45 ம் வயதில் 26 வருடம் புகாரி மஜ்லிஸ் நடத்திவிட்டு ஆலமுல் பர்ஸக் நோக்கிப் புறப்பட்டார்கள். அன்னவர்களின் புனித உடல் கொழும்பில் இருந்து வேர்விலைக்கு கொண்டுவரப்பட்டு பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரித் தக்கிய்யா அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Thanks : Muhammed Fahim (Musthafavi)

Leave a Comment