செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ்
கேகாலை மாவட்டத்தில் கன்னத்தோட்டை கிராமத்தின் ஜூம்ஆப் பள்ளிவாசலின் அருகே செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹு ல்லாஹ் அவர்களின் ஸியாரம் அமைந்துள்ளது. இவர்கள் யெமன் நாட்டில் இருந்து வந்தாக கூறப்படுகின்றது. இவர்கள் மற்றும் இவர்களது குடும்பத்தினர் ஆற்றங்கரையாக வந்து கன்னத்தோட்டையை வந்தடைந்தாக கூறப்படுகின்றது. பாவாதம் மலையை தரிசிப்பதற்காக வந்தபோதே இவர்கள் இக்கிராமத்தை வந்தடைந்தாக நம்பப்படுகின்றது. ஏனெனில், ஆதிகாலம் தொட்டு பாவதமலையை தரிசிப்பதற்காக அரேபியர்கள் இலங்கைக்கு வந்ததாக வரலாற்று ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், கன்னத்தோட்டை கிராமம் இப்னுபதூதா மற்றும் ஏனைய அரேபியர்கள் பாவதமலைக்கு செல்வதற்கு பயன்படுத்திய பாதையை அண்மித்து காணப்படுவது கவனிக்கப்படவேண்டிய ஓர் அம்சமாகும். செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸியாரத்திற்கு அருகே சில கப்றுகள் காணப்படுவதோடு, இவை அவர்களது குடும்பத்தாரினது ஸியாரங்கள் என நம்பப்படுகின்றது. செய்யித் இஸ்மாயீல் மௌலானா அவர்கள் வாழ்ந்தகாலம் சரியாக அறியப்படவில்லை என்றாலும், அவர்கள் பற்றி கூறப்படுகின்ற சம்பவங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, போர்த்துக்கேயர் இலங்கையை வந்தடைந்த காலத்தில் அல்லது அதற்கு முன்னர் அவர்கள் வாழ்ந்தாக ஊகிக்கலாம். செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழந்த காலத்தில், அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஆட்சிசெய்த மன்னனுக்கு அவர்கள் மீது பெரும் மரியாதை இருந்தாகவும் மரபுவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. அவர்களது ஸியாரத்தில் வைக்கப்பட்டுள்ள மீஸான் கல்லானது சித்திர வேலைப்பாடுகள் மிக்க சந்திரவட்டக்கல்லை ஒத்த வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும். மேலும், செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு அப்பிரதேச மன்னனிடத்தில் காணப்பட்ட மரியாதையின் காரணமாகவே அவர்களது மக்பராவில் சித்திர வேலைப்பாடுகள் மிக்க மீஸான் கல் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம். அவர்களது ஸியாரம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னர் கந்தூரி வைபவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது அவை நடைபெறுவதில்லை.
இன்றைக்கு ஏறத்தாள 60 வருடங்களுக்கு முன்னர் கன்னத்தோட்டை பள்ளிவாசலுக்கு தஹ்வா பணிக்கு சென்ற வெலிகாமத்தை சேர்ந்த அஸ்ஸையித் யாஸீன் மௌலானா அவர்களினாலே, செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸியாரம் அமைந்துள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது.அஸ்ஸையித் யாஸீன் மௌலானா அவர்களின் கனவில்வந்து செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்கள் தம்மை பற்றியும், தான் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் பற்றியும் அறிவித்ததன் அடிப்படையில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து அவர்கள் பெயர் பறிக்கப்பட்ட மீஸான் கல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,அஸ்ஸையித் யாஸீன் மௌலானா அவர்களினால் செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி ஒரு பைத் இயற்றப்பட்டு அவர்களது ஸியாரத்தில் ஓதிப்பட்டு வந்ததது குறிப்பிடத்தக்கது.
கன்னத்தோட்டை கிராமத்தின் தொன்மையை பறைசாற்றுகின்ற செய்யித் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸியாரத்துடன் கூடிய இடம் தற்போது உடைந்த நிலையில் காணப்படுவது கவலைக்குரிய அம்சாகும். முஸ்லிம்கள் தமது வரலாற்றுத் தொன்மையினை உறுதிப்படுத்துவதற்கு ஸியாரங்கள்முக்கிய ஆதாரங்கள் என்பதால் அவற்றை சரியான முறையில் பேணிப் பாதுகாப்பது எமது கடமையாகும்.
உசாத்துணை நூல் : ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மௌலானா வரலாறு பாகம் 3
தகவல் மற்றும் பட உதவி : ஹிஸாம் ஹிஜாஸ்
ஆக்கம் : இப்ஹாம் நவாஸ்
(படங்கள் : ஸியாரத்தின் தற்போதைய தோற்றம் ,ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மௌலானா அவர்களால் இஸ்மாயீல் மௌலானா றஹிமஹுல்லாஹ் பற்றி
இயற்றப்பட்ட பைத்தின் ஒரு பகுதி)
இயற்றப்பட்ட பைத்தின் ஒரு பகுதி)




Leave a Comment