இலங்கை முஸ்லிம்களின் சமய,கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சியின் முன்னோடி- கசாவத்தை ஆலிம் றஹிமஹுல்லாஹ்

Fig 1


இலங்கை முஸ்லிம்களின் சமய,கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் மிக முக்கியமான ஒருவராக கசாவத்தை ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறியப்படுகின்றார். இவர்களது நினைவு தினம் றமழான் மாதம் பிறை 19 ஆகும். இவர்கள் கசாவத்தை ஆலிம் அப்பா புலவர் என மக்கள் மத்தியில் அறியப்படுகின்றார்கள். இலங்கை முஸ்லிம்களின் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அறிஞர் சித்திலெப்பை அவர்களின்

ஆன்மீக வழிகாட்டியாக இவர்கள் விளங்கினார்கள்.
இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் முன்னோடிகளாக மூவர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அஷ்செய்க் ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி(றஹிமஹுல்லாஹ்), அஷ்செய்க் முஸ்பா இப்னு பாவா ஆதம் (றஹிமஹுல்லாஹ்), கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) ஆகிய இலங்கையச் சேர்ந்த இம்மூவருமே இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அக்குறணையின் கசாவத்தை என்ற இடத்தில் 1829ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர்களது இயற்பெயர் செய்கு முஹம்மத் ஆகும். இவர்களது தந்தையின் பெயர் அஷ்செய்கு அஹமத் என்பதாகும். இவர்களது தந்தையார் ஒரு ஆலிமாகத் திகழ்ந்தார்கள். ஆரம்பக் கல்வியை இங்கு முடித்துவிட்டு, உயர்கல்விக்காக இந்தியாவின் காயல்பட்டிணத்திற்கு சென்றார்கள். காயல்பட்டிணத்தில் அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலி(றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கற்றார்கள். தைக்கா ஸாஹிப் வலி(றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மிக முக்கிய மாணவர்களில் ஒருவராக
கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளங்கினார்கள். அரபு இலக்கணத்திலும், இலக்கியத்திலும் ஆழமான பாண்டியத்தைப் பெற்றுக் கொண்ட கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அரபு மற்றும் தமிழ்மொழியில் கவிபாடும் ஆற்றலைப் பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கையில் அரபு மத்ரஸாக்கள் குறைவாகக் காணப்பட்ட காலப்பகுதியில் கசாவத்தையில் உள்ள
தனது வீட்டை குர்ஆன் மத்ரஸாவாக்கி அங்கு மாணவர்களுக்கு ஓதிக்கொடுத்தார்கள். இவர்கள் கசாவத்தையில் நடாத்திய அரபு மத்ரஸாவில் அஷ்செய்கு ஸைன் மெளலானா மற்றும் அறிஞர் சித்திலெப்பை போன்றோர் கல்வி கற்றார்கள். 1892ஆம் ஆண்டு கல்ஹின்னையில் ஒரு அரபு மத்ரஸா உருவாவதற்கு காரணமாக இருந்தார்கள். அறிஞர் சித்திலெப்பை அவர்கள் கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி குறிப்பிடும் போது , " கசாவத்தை முஹம்மத் லெப்பே ஆலிம் அவர்கள் லாஹிருடைய இல்மில் மிகவும் தேர்ச்சியுடையவர். இலங்கையில் எந்தக் கோட்டுத் தலங்களிலும் மார்க்க வழக்குகள் உண்டானால் அவர்களின் பத்வாவையே ஏற்றுக் கொண்டார்கள்." என்று குறிப்பிடுகின்றார். கசாவத்தை அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா நகருக்கு சென்றிருந்த போது அவர்களது கவி ஆற்றலையும், மார்க்க ஞானத்தையும் கண்டு வியந்த அங்கிருந்த அறிஞர் பெருமக்கள் அவர்களைப் போற்றி "செய்குல் உலமா" என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள்.
கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அரபிலும், அரபுத் தமிழிலும் பல கவிதைகளை இயற்றியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வரலாற்றை அரபியில்
கவிநடையாகவும் உரைநடையாகவும் இயற்றியுள்ளார்கள். தமது ஆன்மீக வழிகாட்டியான காயல்பட்டிணம் தைக்கா ஸாகிப் வலி(றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி ஒரு பாமலையைப் பாடியுள்ளார்கள் . ஹம்ஸியாத் எனும் அறபு மொழி நுாலையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்கள். கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பாடிய
'தீன் மாலை' அறபுத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. தீனின் பர்ளுகளான ஈமான்,இஸ்லாம்,தெளஹீத்,மஹ்ரிபா ஆகிய நான்கு விடயங்களையும் இதில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1310 (கி.பி. 1893) றமழான் மாதம் பிறை 19 வெள்ளிக்கிழமையன்று தனது 63ஆவது வயதில் இறையடி சேரந்தார்கள். அவர்கள் அக்குறணை பெரிய பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
பிற்குறிப்பு - கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் அடக்கஸ்தளம் முன்னர் ஸியாரம் வடிவில் கட்டப்பட்டிருந்ததாகவும், பிற்காலத்தில் அது சேதமாக்கப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது. அவர்களது அடக்கஸ்தளத்தின் தற்போதைய படம் இணைக்கப்பட்டுள்ளது. (படம் 1) இலங்கையின் இஸ்லாமிய மறுமலர்ச்சியில் மிக முக்கிய ஒருவராக் கருதப்படும் கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின்
அடக்கஸ்தளத்தை அடையாளப்படுத்தி பேணிப்பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.
Fig 2



படம் 1- கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் அடக்கஸ்தளத்தின் தற்போதைய தோற்றம்
படம் 2- கசாவத்தை ஆலிம் அப்பா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கையெழுத்தில் எழுதப்பட்ட நுால்
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்

No comments

Powered by Blogger.