இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்

இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவராக இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) மொரோக்கோவின் வட மேற்கு பகுதியான குமாரா பிரதேசகத்தின் பனீ யவ்ரத் என்ற கிராமத்தில் ஹிஜ்ரி 593இல் (கி.பி.1196) பிறந்தார்கள். இவர்கள் தந்தை மற்றும் தாய் வழியில் நபிகள் நாயகம்  ﷺ அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பெற்றுக்கொண்டார்கள். சிறு வயதிலேயே புனித அல்-குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்னர் தனது உயர்கல்விக்காக மொரோக்கோவின் பெஸ் நகருக்குச் சென்ற இமாம் அவர்கள், பெஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். இளைஞராக இருக்கும் போது பிக்ஹ் மற்றும் ஏனைய துறைகளிலுள்ள அறிஞர்களுடன் சமயரீதியான விவாதங்களில் ஈடுபடுவதில் சிறந்தவராக இமாம் அவர்கள் காணப்பட்டார்கள். அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் செய்ஹ் முஹம்மத் ஹரஸம்  (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம், இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கற்றதுடன், செய்ஹ் முஹம்மத் ஹரஸம்  (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பைய்யத்தும் பெற்றுக் கொண்டார்கள். அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்த இமாம் அவர்கள் பின்னர் டியூனிசியா மற்றும் ஈராக் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தார்கள். ஈராக்கில் தங்கியிருந்த காலத்தில் இமாம் அவர்கள் செய்ஹ் அபூ அல்-பத்ஹ் அல்-வஸிதி (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கல்வி கற்றார்கள். பின்னர், மொரோக்கோவுக்குத் திரும்பிய இமாம் அவர்கள், மொரோக்கோவில் அஷ்செய்ஹ் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்தித்தார்கள். அஷ்செய்ஹ் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மொரோக்கோவின் ரிப் மலைத் தொடரின் ஜபல் அலம் மலையுச்சியில் வாழ்ந்து வந்தார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் சில காலம் தனது செய்ஹ், அஷ்செய்ஹ் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் ஜபல் அலம் மலையுச்சியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் தங்கினார்கள். அஷ்செய்ஹ் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பைஅத்தைப் பெற்றுக்கொண்ட இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், அஷ்செய்ஹ் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கட்டளைப்படி டியூனிசியாவின் இப்ரிகியாவில் அமைந்துள்ள ஷாதிலா என்ற கிராமத்துக்குச் சென்றார்கள்.இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதிலாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் இறைத்தியானத்திலும், ஆன்மீக ரீதியில் தன்னை பக்குவப்படுத்துவதிலும் ஈடுபட்டார்கள். ஷாதிலாவில் சிறிது காலம் தங்கியிருந்தன் பின்னர், மார்க்கப் பிரச்சாரப் பணிக்காக இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் டியூனிஸ் நகரத்திற்குச் சென்றார்கள். 

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்கள் கி.பி. 1243இல் தனது 47வயதில் டியூனிஸ் நகரில் தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். முதன் முதலில் டியூனிஸ் நகரின் அல்-பலத் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றினார்கள். இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர். அக்காலப்பகுதியில் டியூனிஸ் நகரின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் அபூ ஸகரிய்யா யஹ்யா அவர்களும் இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்டார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் முதலில் 40பேர் பைஅத் பெற்றனர். இதுவே ஷாதுலிய்யா தரீக்காவின் ஆரம்பமாகும் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் புகழ் நாளுக்கு நாள் டியூனிஸ் நகரில் அதிகரித்துச் சென்றது. இதனால், டியூனிஸ் நகர அறிஞர்கள் பலர் இமாம் அவர்கள் மீது பொறாமை கொண்டனர். இதில் முக்கியமானவராக டியூனிஸ் நகரின் தலைமை முப்தி அப்துல் காஸிம் இப்னு பஸ்ரா காணப்பட்டார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) மீது பல பொய் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தார்கள். அவை மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படாத போது, இமாமவர்கள் பற்றி சுல்தானிடம் முறையிட்டார்கள். அதனால் உண்மையை அறியும் பொருட்டு சுல்தான் அபூ ஸகரிய்யா யஹ்யா அவர்கள் ,பல முன்னணி அறிஞர்களை ஒன்றுகூட்டி அவர்கள் மத்தியில் இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களையும் அழைத்து, இமாம் அவர்கள் மீது வைக்கப்ட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கேள்விகளை கேட்கச் செய்தார்கள். எனினும், இறுதியில் இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.எனினும், டியூனிஸ் நகர அறிஞர்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. அதற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சுல்தான் மேற்கொள்ளவில்லை. இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு எதிர்ப்பு தொடர்ந்துகொண்டிருந்த அவ்வேளையில், புனித மக்காவுக்கு ஹஜ் செய்ய செல்வதற்காக வேண்டி டியூனிஸ் நகரை விட்டு வெளியேற அவர்கள் முடிவுசெய்தார்கள். இமாம் அவர்கள் தமது நுாற்றுக் கணக்கான மாணவர்களுடன் டியூனிஸ் நகரை விட்டு வெளியேறினார்கள். இதனை அறிந்த சுல்தான் அவர்கள் தமது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, இமாம் அவர்களுக்கு தொடர்ச்சியாக டியூனிஸ் நகரில் தங்குமாறு வேண்டினார்கள். அதற்கு இமாம் அவர்கள் 'நான் ஹஜ் செய்யும் நோக்கில் நகரை விட்டு வெளியேறுகின்றேன். அல்லாஹ் நாடினால் மீண்டும் இங்கு வருவேன் ' என்று சுல்தானுக்குப் பதில் அனுப்பினார்கள். இமாம் அவர்கள் தனது நுாற்றுக் கணக்கான மாணவர்களுடன் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிவிட்டு, டியூனிஸ் நகரத்திற்கு திரும்பினார்கள். இமாம் அவர்கள் டியூனிஸ் நகரில் சில மாதங்கள் தங்கியிருந்தார்கள். இக்காலப் பகுதியில்தான் செய்ஹ் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், இமாம் அவர்களிடம் பைஅத் பெற்றுக்கொண்டார்கள். செய்ஹ் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களே, இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்குப் பின் ஷாதுலிய்யா தரீக்காவின் செய்ஹாக செயற்பட்டார்கள். 

கி.பி. 1246ஆம் ஆண்டு  இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது சகோதரர் அப்துல்லாஹ் , செய்ஹ் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) ,தனது பணியாளர் அபூஆஸிம் உட்பட  நுாற்றுக்கணக்காக முரீதீன்களுடன் டியூனிஸ் நகரிலிருந்து எகிப்தின் அலெக்ஸாண்ரியா நகருக்குச் சென்றார்கள். அலெக்ஸாண்ரியாவில் இமாம் அவர்கள் தனது வீட்டை அமைத்துக்கொண்டார்கள். எகிப்து சுல்தான் இமாம் அவர்களின் ஸாவியாவுக்காக வேண்டி அலெக்ஸாண்ரியாவில் பெரிய கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்கள்.அதில் மேல்மாடியில் இமாம் அவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்தனர். அடுத்த மாடியொன்று பள்ளிவாசலாக மாற்றப்பட்டதுடன், அதில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. மற்றுமொரு மாடி தனது மாணவர்களுக்காக வேண்டி பெரும் ஸாவியா ஒன்றாக மாற்றப்பட்டது. குறுகிய காலத்தில் ஷாதுலிய்யா வழியமைப்பு எகிப்தில் பிரபலமடைந்தது. பல நீதிமன்ற அதிகாரிகள், செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) மற்றும் செய்ஹ் அல்-முன்திரீ(றஹிமஹுல்லாஹ்) போன்ற மார்க்க அறிஞர்கள் மற்றும் சமூகத்தில் பல்வேறுபட்ட நிலைகளில் காணப்பட்ட மக்கள் இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முரீதீன்களாக இருந்தனர். இமாம் அவர்கள் தனது மரணம் வரையில், 12 வருடங்கள் அலெக்ஸாண்ரியா நகரில் வாழ்ந்தார்கள். டியூனிசியாவில் இமாம் அவர்களின் ஷாதுலிய்யா வழியமைப்பைப் பின்பற்றும் மாணவர்கள் சிறு குழுக்களாக காணப்பட்டனர். அவர்களில் முக்கிய ஒருவராக இமாம் அவர்களின் வாழ்க்கை சரிதையை எழுதிய செய்ஹ் முஹம்மத் இப்னு ஸப்பாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இருந்தார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் புத்தகங்கள் எழுதப்படவில்லை. 'எனது மாணவர்களே எனது புத்தகங்கள்' என இமாம் அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள். எனினும், ஹிஸ்புல் பஹ்ர் மற்றும் ஹிஸ்புன் நஸ்ர் போன்ற அவ்ராதுகள் இமாம் அவர்களால் அவர்களது மாணவர்களுக்கு படித்துக் கொடுக்கப்பட்டது. இமாம் அவர்களின் வாய்மொழி கற்பித்தலுக்கு மேலதிகமாக , டியூனிஸில் வாழ்ந்துகொண்டிருந்த இமாம் அவர்களின் முரீதீன்களுக்கு கடிதம் மூலமாக கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. டியூனிஸின் இப்ரிகிய்யாவில் இமாம் அவர்களால் அமைக்கப்பட்ட ஸாவியாவை நடாத்திச் சென்ற செய்ஹ் அபுல் ஹஸன் ஸகல்லி (றஹிமஹுல்லாஹ்) மற்றும் செய்ஹ் அப்துஸ்ஸலாம் அல்ஹபீபீ (றஹிமஹுல்லாஹ்) ஆகியோருக்கும், இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கும் இடையில் பல கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. ஷாதுலிய்யா வழியமைப்பின் கற்பித்தல்களை விளங்கிக் கொள்வதற்கான மிக முக்கிய ஆதாரமாக இக்கடிதங்கள் காணப்படுகின்றன.

கி.பி. 1250ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மன்சூரா யுத்தம் நடைபெற்றது. இது எகிப்தின் அய்யூபிய படைக்கும், சிலுவை வீரர்களுக்கும் இடையில் நடைபெற்றது. எகிப்தின் அய்யூபிய படைக்கு அமீர் பக்ருத்தீன் யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னர் சிலுவைப் படைக்குத் தலைமை தாங்கினார்.இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நுாற்றுக்கணக்கான முரீதீன்களுடன் இப்போரில் கலந்துகொண்டார்கள். இப்போரில் எகிப்தியப் படை வெற்றிப் பெற்றதுடன், பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னரும் அவரது படைத்தளபதிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 

எகிப்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்  ஒவ்வொரு வருடமும், தனது முரீதீன்களுடன் மக்காவுக்குச் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். கி.பி. 1258இல் ஜென்கிஸ்கான் (தாத்தாரியர்கள்) பக்தாத் நகரை கைப்பற்றியிருந்தனர். எனினும், இமாம் அவர்கள் அதற்காக வேண்டி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் இருக்க விரும்பவில்லை. எனவே, தமது முரீதீன்களுக்கு ஹஜ்ஜுக்கு செல்ல ஆயத்தமாகுமாறு கூறினார்கள். அவர்கள் தெற்குப் பாதையால் செல்ல தீர்மானித்தனர். அதாவது கெய்ரோ நகரின் ஊடாக நைல் நதியை கடந்து, எகிப்தின் மேல் பகுதியான இத்பு பாலைவனத்தை அடைந்து, அங்கிருந்து செங்கடலைக் கடந்து அரேபிய தீபகற்பத்தின் ஜித்தா நகரை அடைந்து, ஜித்தாவில் இருந்து புனித மக்கா நகரை அடைவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஹஜ்ஜுக்கான பயணத்தின் போது,பயணக்குழு எகிப்தின் அய்தப் பாலைவனப் பகுதியை அடைந்ததும் இமாம் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இறுதியாக பயணக்குழு ஹுமைதராவை வந்தடைந்தது. அப்போது இமாம் அவர்களின் நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் தமது முரீதீன்களை அழைத்து , தனது வபாத்திற்கு பின்னர் தனது வழிகாட்டல்களை பின்பற்றி நடக்குமாறுஆலோசனை கூறினார்கள். மாலை நேரத்தில் தனது மாணவரான செய்ஹ் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களை அழைத்து தனது கலீபாவாக நியமித்தார்கள்.அந்த நாளின் இரவில் இமாம் அவர்கள் வபாத்தானார்கள். இமாம் அவர்கள் பரந்த பாலைவனத்தின் மத்தியில் ஹுமைதராவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். 

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா வழியமைப்பை பிற்காலத்தில் தோண்றிய பல புகழ்பெற்ற அறிஞர்கள் தொடர்ந்தனர். அவர்களில் இமாம் அவர்களின் மாணவரும், ஷாதுலிய்யா வழியமைப்பின் முதலாவது செய்ஹாகாவும்  அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். எகிப்தின் நான்கு பெரும் சூபி அறிஞர்களில் முதன்மையானவராக இவர்கள் கருதப்படுகின்றார்கள். அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களைத் தொடர்ந்து, ஷாதுலிய்யா வழியமைப்பின் செய்ஹாக இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அதாஅல்லாஹ் இஸ்கந்தரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். வட ஆபிரிக்காவில் ஷாதுலிய்யா வழியமைப்பை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்வதற்கு காரணமாக இமாம் அதாஅல்லாஹ் இஸ்கந்தரி(றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இருந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முரீதாக இருந்த இவர்கள், சுல்தானுல் உலமா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் உலகம் தாத்தாரியர்களதும், சிலுவை வீரர்களதும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த வேளை, பிரிந்து இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுகளை ஒன்றுபடுத்துவதற்கு தனது உறுதியான சொற்பொழிவுகளின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார்கள். செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆணித்தரமான உரையே தாத்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜலுாத் என்ற யுத்தத்தின் மூலம் முதன் முறையாக தாத்தாரியர்கள் (மங்கோலியர்கள்) , முஸ்லிம்களால் (மம்லுாக்கிய ஆட்சியாளர்) தோற்கடிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற கஸீதாவாகக் கருதப்படும்,கஸீததுல் புர்தாவை இயற்றிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு ஸஈத் பூஸரி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் செய்ஹ் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக இருந்தார்கள்.  நபிகள் நாயகம்  ﷺ அவர்களின் பெயரிலான புகழ்பெற்ற ஸலவாத் தொகுப்பான 'தலாஇலுல் கைராத்தை' கோர்வை செய்த செய்ஹ் முஹம்மத் இப்னு சுலைமான் அல்-ஜஸூலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்கள். மொரோக்கோவின் பெஸ் நகரில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞரான செய்ஹ் அஹமத் அல்-ஸரூக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஸரூக்கிய்யா பிரிவை தோற்றுவித்தார்கள். எகிப்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தலைசிறந்த எழுத்தாளருமான இமாம் ஜலாலுத்தீன் அல்-ஸுயூத்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் புகழ்பெற்ற செய்ஹகாக காணப்பட்டார்கள். இமாம் புகாரி அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு புகழ்பெற்ற விளக்கவுரையை எழுதிய இமாம் சிஹாபுத்தீன் அல்-கஸ்தலானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் செய்ஹ் ஒருவராகக் காணப்பட்டார்கள். புகழ்பெற்ற முஜத்தித்தாகக் காணப்பட்ட இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஒரு செய்ஹாக செயற்பட்டார்கள். மொரோக்கோவின் பெஸ் நகரைச் சேரந்த  செய்ஹ் முஹம்மத் அல்-அரபி அல்-தர்காவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்  ஷாதுலிய்யா வழியமைப்பின் தர்காவி பிரிவை தோற்றுவித்தார்கள். காதிரிய்யா வழியமைப்புக்குப் பின்னர் உலகில் அதிகமானோரால் பின்பற்றப்படும் பிரிவாக ஷாதுலிய்யா வழியமைப்பு காணப்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் ஷாதுலிய்யா 

வழியமைப்பின் 72பிரிவுகள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஷாதுலிய்யா வழியமைப்பைப் பின்பற்றுகின்றனர். வட ஆபிரிக்கா நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் டியூனிசியா ஆகிய நாடுகளில் ஷாதுலிய்யா வழியமைப்பு அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இமாம் முஹம்மத் அல் பாஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட  ஷாதுலிய்யா வழியமைப்பின் பாஸிய்யா பிரிவானது இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மேற்குலகில் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்பத் தரீக்காக்களில் ஒன்றாக ஷாதுலிய்யா வழியமைப்பின் தர்காவிய்யா பிரிவின் அலவிய்யா உப பிரிவு காணப்படுகின்றது.இது அல்ஜீரியாவைச் சேர்ந்த செய்ஹ் அஹமத் அல்-அலவி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஷாதுலிய்யா வழியமைப்பின் மற்றுமொரு பிரிவான பதவிய்யா, செய்ஹ் இப்ராஹீம் அல்-பதவி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வழியமைப்பு எகிப்து,இந்தோனேசியா,துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. ஷாதுலிய்யா வழியமைப்பின் அத்தாஸிய்யா பிரிவு யெமன்,பாகிஸ்தான்,இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. செய்ஹ் முஹம்மத் அல்-ஹாஷிமி அல்-தில்மிஸானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா வழியமைப்பின் தர்காவிய்யா ஹாஷிமிய்யா பிரிவு ஜோர்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்படுகின்றது. இத்தரீக்காவின் மேற்கு நாடுகளுக்கு பொறுப்பாக செய்ஹ் நுாஹ் கில்லர் மற்றும் செய்ஹ் முஹம்மத் அல்-யாகூபி ஆகியோர் இருக்கின்றனர். உதுமானியப் பேரரசின் சுல்தான்களுள் முக்கிய ஒருவராகக் கருதப்படும் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். அவர்களது செய்ஹாக அஷ்செய்ஹ் ஸபீர் எபிந்தி  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்பட்டார்கள்.  நவீன காலத்தில் தோண்றிய தலைசிறந்த அறிஞராகக் கருதப்படும்செய்ஹுல் அஸ்ஹர் கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். சவூதி அரேபியாவின் முதலாவது கலாநிதியும், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி முஹம்மத் இப்னு அலவி அல்-மாலிக்கி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை விரிவுரையாளர்களாக பணியாற்றும் பலர் ஷாதுலிய்யா வழியமைப்பை பின்பற்றுகின்றனர். இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களை முஸ்லிம் உலகம் ஷவ்வால் மாதம் நன்றியுடன் நினைவுகூருகின்றது. இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வழிகாட்டுதலின் ஊடாக தற்போது முஸ்லிம் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே காலத்தின் தேவையாகும். 

© தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்

No comments

Powered by Blogger.