இலங்கை முஸ்லிம்களின் சமய மற்றும் கல்வி மறுமலர்ச்சியின் முன்னோடி – இமாமுஸ் ஸைலான் அஷ்செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்)

இலங்கை முஸ்லிம்களின் சமயம்,கல்வி மற்றும் சமூக ரீதியிலான மறுமலர்ச்சி 19ஆம் நுாற்றாண்டில் ஆரம்பமானது. இலங்கை முஸ்லிம்களின் சமயம், கல்வி போன்ற துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்பத்திய அறிஞர்கள் வரிசையில் மிக முக்கிய ஒருவராக அஷ்செய்கு முஸ்தபா இப்னு பாவா ஆதம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளங்குகின்றார்கள். துல்ஹஜ் மாதம் பிறை 17இல் இவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள்.

அஷ்செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கி.பி. 1836 இல் (ஹிஜ்ரி 1252) பேருவளை நகரில் பிறந்தார்கள். கி.பி. 800ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய துருக்கியின் கொன்யா பிரதேசத்தில் இருந்து இலங்கையின் பேருவளை நகருக்கு சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் வந்தார்கள். இவர்கள் கலீபா உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்தவர்கள் ஆவார். அக்காலப்பகுதியில் பேருவளையை ஆண்ட வசந்தஹிமி மன்னின் கெளரவ விருந்தினராக தங்கியிருந்த இவர்கள், பின்னர் அங்கேயே தமது குடியிருப்பை அமைத்துக்கொண்டார்கள்.பிற்காலத்தில் இந்தியாவின் காயல்பட்டிணம் நகருக்கு சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் சென்றார்கள். அங்கு சில காலம் வாழ்ந்து மரணமடைந்தார்கள். அவர்கள் காயல்பட்டிணம் பள்ளிவசலில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் மகனார் செய்கு உஸ்மானின் வழித்தோண்றலில் வந்த பாவா ஆதம் மரைக்கார் (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு மகனாக அஷ்செய்க் முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பிறந்தர்கள். தனது சிறுவயதிலேயே தாயையும், தந்தையும் இழந்த செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். சிறுவராக இருக்கும் போதே அரபு எழுத்துக்களை அழகாக எழுதும் திறமையை இவர்கள் பெற்றிருந்தார்கள்.
செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி தனது 13ஆவது வயதில் இந்தியாவின் காயல்பட்டிணம் நகருக்குச் சென்றார்கள்.காயல்பட்டிணத்தில் ஹபீப் முஹம்மத் ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் சன்மார்க்க கல்வியைக் கற்றார்கள். காயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலீ (றஹிமஹுல்லாஹ்)
அவர்களிடமும் சன்மார்க்க கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காயல்பட்டிணத்தில் மத்ரஸாவில் கல்வி கற்கும் காலப்பகுதியிலேயே அஷ்செய்கு அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களை முதன் முதலில் சந்தித்தார்கள். காயல்பட்டிணத்தில் தனது கல்வி நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டார்கள். காலி நகரில் ஒரு மத்ரஸாவை ஆரம்பித்து, அதன் உஸ்தாதாக அவர்கள் கடமையாற்றினார்கள். இக்காலப் பகுதியில் காலியில் ஏற்பட்ட பல மார்க்கப் பிரச்சினைகளுக்கு பத்வாவும் வழங்கி வந்தார்கள். பின்னர், ஹஜ் கடமைக்காக புனித மக்கா நகருக்கு சென்றார்கள். அக்காலப்பகுதியில் ஹிஜாஸ் பிராந்தியத்தின் தலைமை முப்தியாகவும், புனித ஹரமைன்களின் இமாமாகவும் (மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மஸ்ஜிதுன் நபவி புனித்தளங்களின்
இமாம்) விளங்கிய செய்குல் இஸ்லாம் இமாம் அஹ்மத் ஸைனி தெஹ்லான் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிம் கல்வி கற்றார்கள். அஹ்மத் ஸைனி தெஹ்லான் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முன்னணி மாணவர்களில் ஒருவராக செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளங்கினார்கள். மேலும் மக்காவில் அஷ்செய்க் ஹிஸ்புல்லாஹி மக்கி (றஹிமஹுல்லாஹ்), அல்லாமா அஸ்ஸையித் அப்துல் ஹமீத் ஸர்வானி(றஹிமஹுல்லாஹ்) போன்ற அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள்.
செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காலியில் வாழ்ந்த காலப்பகுதியில் காயல்பட்டிணத்தில் தமது மத்ரஸாவில் ஏற்கனவே சந்தித்த யெமன் நாட்டின் ஹளரமெளத் பகுதியை சேர்ந்தவரும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழித்தோண்றலில் வந்தவரும், இமாமுமான அஷ்செய்கு அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களை மீண்டும் சந்தித்தார்கள். முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் பெரிதும் கவரப்பட்ட செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், அவர்களது ஆன்மீக மாணவராக மாறினார்கள். முபாரக் மெளலானா(றஹிமஹுல்லாஹ்) அவர்கள், அஷ்செய்கு முஹிய்யத்தின் அப்துல் காதிர் ஜீலானி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக விளங்கினார்கள்.முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களும், செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) இருவரும் சன்மார்க்கப் பணிக்காக இலங்கையின் பல இடங்களுக்கும் சென்றார்கள். இவர்கள் இருவரும் ஒருமுறை கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அம்பை பள்ளிவாசலுக்கு சென்றார்கள்.அங்கு முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் காதிரிய்யா தரீக்காவின் கிலாபத், செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் கஹடோவிட,திஹாரிய, மள்வானை மற்றும் காலி போன்ற ஊர்களுக்கு சென்று சன்மார்கப் பணிகளில் ஈடுபட்டார்கள். அவ்விடங்களில் ஆத்மீக நிலையங்களான தக்கியாக்களை ஏற்பத்தி மக்களை நவ்வழிப்படுத்தினார்கள். பேருவளை நகரில் இவர்களால் ஒரு தக்கியா அமைக்கப்பட்டதுடன், காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் தலைமையகமாக இத்தக்கியா காணப்படுகின்றது. கி.பி. 1866 இல் (ஹிஜ்ரி 1281) ,முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் வபாத்தானார்கள். முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காலி தளாப்பிட்டிய முஹிய்யித்தீன் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டார்கள். முபாரக் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மறைவுக்குப் பின்னர், காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் செய்ஹாக செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். யெமனில் இருந்து இலங்கைக்கு வந்த ஹஸன் இப்னு அப்துல் பாரி அஹ்தல் மெளலானா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் உத்தரவின் பேரில் பேருவளை தக்கியாவில் புனித புகாரி ஹதீஸ் கிரந்தம் ஓதும் நிகழ்வை ஏற்பாடு செய்தார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகாரி ஹதீஸ் கிரந்தம் ஓதும் நிகழ்வு ஒரு நுாற்றாண்டு காலத்துக்கு மேலாக, அதாவது 140 வருடங்களாக இன்றுவரை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது மகனாருடன் தனது ஆறாவது ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்குச் சென்றார்கள். ஹஜ் கிரிகையின் போது கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்ட அவர்கள் கி.பி. 1888ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி (ஹிஜ்ரி 1305, துல்ஹஜ் பிறை 17இல்) மக்காவில் காலமானார்கள். அவர்கள் மக்காவின் ஜன்னதுல் முஅல்லாவில்,அன்னை கதீஜா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி பல அறிஞர்கள் பல நுாற்களையும், இரங்கற்பாட்களையும் எழுதியிருக்கின்றனர். 19ஆம் நுாற்றாண்டில் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்பத்தியவரும், 350இற்கும் அதிகமான பள்ளிவாசல்களையும் கல்விக்கூடங்களையும் அமைத்தவருமான இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், "மவாஹிபுல்லாஹில் அலிய்யி பீ மனாகிபிஷ் ஷாஹில் பர்பலிய்யி" என்ற பெயரில் ஒரு இரங்கற்பா நுாலை (மர்ஸிய்யா) எழுதியுள்ளார்கள். மேலும் மக்காவில் வாழ்ந்த
செய்கு இமாம் அஹ்மத் அமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்களும், அஸ்ஸைய்யித் அப்துல்லாஹில் மஸாவில் அஹ்தலி யெமனி (றஹிமஹுல்லாஹ்)அவர்களும்,
செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி மர்ஸியாக்களை எழுதியுள்ளனர். செய்கு இஸ்மாயீல் இப்னு செய்கு அப்துல் காதிருல் பர்பலீ (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் நீளமான கவிதை தொகுப்பொன்றை எழுதியுள்ளார்கள். காலி ஷம்சுதீன் புலவர் அவர்கள் முஸ்தபா மாலை என்ற நுாலையும், புலவர் முஹம்மது காஸீம் புலவரப்பா அவர்கள் செய்கு முஸ்தபா அவர்களின் அலங்காரக் கும்மி என்ற நுாலையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த அறிஞர்களில் மிக முக்கிய ஒருவராக செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்படுவதாக கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் தனது ' Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu ' என்ற ஆய்வுநுாலில் குறிப்பிடுகின்றார். ஜேர்மனின் பெர்லின் பெரி பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் பேராசிரியர் கலாநிதி டோர்ஸ்டன் டெஸ்சேசர் அவர்கள், அரபுத் தமிழுக்கு பங்களிப்புச் செய்த மிக முக்கிய நான்கு அறிஞர்களில் ஒருவராக செய்கு செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களை தனது ' Islam in Tamil Nadu ' என்ற ஆய்வுநுாலில் குறிப்பிடுகின்றார். இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா இப்னு பாவா ஆதம் றஹிமஹூல்லாஹ் அவர்கள் எழுதிய தப்ஸீர் "பத்ஹூர் றஹ்மா பீ தர்ஜூமதி தப்ஸீருல் குர்ஆன்", பிரதியொன்று நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தின் Universiteit Leiden / Leiden University ஆவணக்காப்பத்தில் பாதுகாப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி தப்ஸீரில் குர்ஆன் தப்ஸீரின் முதல் பக்கப்படம்

செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அர்வி (அரபுத் தமிழ்) இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த பெரும் அறிஞராகக் கருதப்படுகின்றார்கள். உலகில் தமிழ் மொழியில் (அரபுத் தமிழில்) வெளியிடப்பட்ட முதலாவது தப்ஸீர்,செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் எழுதப்பட்டதாகும். "பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி தப்ஸீரில் குர்ஆன்" என்ற பெயரில் இவ் அல்குர்ஆன் விளக்கவுரை கி.பி. 1874இல் (ஹிஜ்ரி 1291) வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் அச்சுத்துறை வரலாற்றில் முதலாவது அச்சில் வெளியிடப்பட்ட நுாலாக "மீதான் மாலை" விளங்குகின்றது. மீதான் மாலை நுால், கி.பி. 1868இல் (ஹிஜ்ரி 1285) முதன்முறையாக வெளியிடப்பட்டது. இது அரபுத் தமிழில் எழுதப்பட்ட 149 பாடல்களை உள்ளடக்கிய கவிதை நுாலாகும். இந்நுாலுக்கான விளக்கவுரையை செய்கு முஸ்தபா (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகனார், முஹம்மது ஹாஜியார் ஆலிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் எழுதினார்கள். உண்மையான இஸ்லாமியக் கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைப்பதற்காக இலங்கையில் எழுதப்பட்ட மிகப்பழமையான அறபுத்தமிழ் நுாலாக மீதான் மாலை காணப்படுகின்றது.
செய்கு முஸ்தபா(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எழுதிய புத்தகங்கள்:
1. பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி தப்ஸீரில் குர்ஆன்
2. மீதான் மாலை
3. அஷ்செய்கு அஹ்மது இப்னு முபாரக் மெளலானா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி எழுதப்பட்ட மர்திய்யா (இரங்கற்பா)
4. பவாரிகுல் ஹிதாயா என்ற அறபுமொழி சட்டநுாலை சஹ்லுத் தவ்லா என்ற மூலநுாலிலிருந்து அறபுத் தமிழில் மொழிபெயர்த்தார்கள்.
5. பத்ஹுல் முஈன் என்ற சட்டநுாலுக்கு அறபியில் சுருக்கமான விளக்கம் (ஹாஷியா) எழுதினார்கள்.
6. 'இப்னு நபாதா' உடைய குத்பாவுக்கு அறபுத் தமிழில் உரை எழுதினார்கள்.
7. 'ஸபீனத்துன்னஜாத்' எனும் கிரந்தத்தை தமிழில் மொழிபெயர்த்தார்கள்.
8. காயல்பட்டிணம் உமர் வலீயுல்லாஹ் அவர்கள் பற்றி 'மெய்ஞானத்துதி' என்ற கவிதை நுாலை எழுதினார்கள்.

உசாத்துணைகள்:
  •  கலாநிதி. சுக்ரி . (1986). இலங்கை முஸ்லிம்களின் வரலாறு. பேருவளை: ஜாமிஆ கல்விஸ்தபானம்.
  • எஸ். எச். எம். ஜெமீல். (1947). சுவடி ஆற்றுப்படை. கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்.
  • Tayka Shuʻayb ʻālim (2020). Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu : a study of the contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian and Urdu languages, literature, and education. Singapore: The Noble Ark.

  • மஹ்ரூப் (1972).நபவிய்யா வழிவகுத்த நால்வர்கள்.அலிபன் ப்ரஸ்.கொழும்பு.

  • சிறப்பு மலர்(1999).மள்வானை பூந்தோட்ட தக்கியா திறப்பு விழா சிறப்பு மலர்.மள்வானை

தொகுப்பு - இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

No comments

Powered by Blogger.