இலங்கையின் 1100 வருடங்கள் பழமைவாய்ந்த மக்பரா - காலித் இப்னு பகாயா (றஹிமஹுல்லாஹ்)


இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் ஆதிகாலம் தொட்டு தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இவ்வகையில் அப்பாஸிய ஆட்சிக்காலத்தின் போது ,அதாவது 10ஆம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் வாழ்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முஸ்லிம்கள் மார்க்க அறிவு குன்றியவர்களாகக் காணப்பட்டதை அறிந்த பக்தாத் கலீபா, காலித் இப்னு பகாயா (றஹிமஹுல்லாஹ்) என்ற அறிஞரை மார்க்கத்தை படித்துக்கொடுப்பதற்காக வேண்டி இலங்கைக்கு அனுப்பினார். அவர்கள் இலங்கையின் கொழும்பு பள்ளிவாசலில் தங்கிநின்று முஸ்லிம்களுக்கு மார்க்கக் கடமைகளை கற்றுக்கொடுத்ததோடு, பிற்காலத்தில் மரணமடைந்தது, அப்பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவர்கள் பற்றிய தகவல்களை இலங்கையின் மூன்றாவது பிரதம நீதியரசராக கடமையாற்றியவரும், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஆய்வுசெய்தவருமான சேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் அவர்கள் பதிவுசெய்துள்ளார். இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, சேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன்  மேற்குறிப்பிட்ட கல்வெட்டை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மையவாடியில் இருந்து கண்டெடுத்து இலங்கை தேசிய நுாதானசாலையில் பாதுகாத்து வைத்தார். இன்றும் இக்கல்வெட்டை கொழும்பு தேசிய நுாதனசாலையில்     (Colombo National Museum) பார்வையிட முடியும். இக்கல்வெட்டானது கூபிக் அரபு எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளதோடு, இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் காலித் இப்னு பகாயா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹிஜ்ரி 317 ரஜப் பிறை 5இல் வபாத்தானார்கள். அதாவது ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் காலித் இப்னு பகாயா (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மரணித்த வருடம் கி.பி. 929 ஆகும். இதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் 1100 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. அத்துடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலும் 1100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்க முடியும்.


இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

No comments

Powered by Blogger.