கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஸியாரம்
கண்டி நகரில் அமைந்துள்ள மீரான் மகாம் பள்ளிவாசலில் ஷாம் சிஹாப்தீன் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம் அமையப் பெற்றுள்ளது. இவர்கள் 16ம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் வாழ்ந்த சிந்தனையாளரும், மெய்ஞானியும், போர்த்துகேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரரும், அறிஞருமான நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர் ஆவார். போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் இலங்கைக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென் இந்தியாவிலும், இலங்கையிலும் புனித இஸ்லாத்தை பாதுகாப்பதற்கு பெரும் பங்காற்றியவராக நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இலங்கைக்கு வந்தபோது, அவர்களுடன் பாவாத மலையை தரிசிப்பதற்காக ஷாம் சிஹாப்தீன் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் சென்றார்கள்.
நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மத்திய மலைநாட்டுக்கான விஜயத்தின் போது, தற்போது மீரான் மகாம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் அவர்களது மாணவர் ஷாம் சிஹாப்தீன் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் தங்கியிருந்தாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மலைநாட்டுப் பிரதேசத்தில் ஷாம் சிஹாப்தீன் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்கியிருந்து, புனித இஸ்லாமியப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார்கள். ஷாம் சிஹாப்தீன் வலீயுல்லாஹ் அவர்களின் வபாத்தின் பின்னர் தற்போது மீரான் மகாம் பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 1855ஆம் ஆண்டு கண்டி மீரான் மக்காம் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வருகையுடன் தொடர்புபட்ட இடம் என்பதால், நாளடைவில் இம் மஸ்ஜித் மீரான் மகாம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவில் மகான் நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான்
ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களை "மீரான் ஸாஹிப் ஆண்டகை" என்று அழைக்கப்படும் வழக்கம் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்

Leave a Comment