கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள 500 வருடங்கள் பழமைவாய்ந்த அஷ்செய்ஹ் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம்


இலங்கைக்கும் அரபுநாடுகளுக்கும் இடையில் ஆதிகாலம்தொட்டே தொடர்புகள் இருந்து வந்திருக்கின்றன. இலங்கையின் பாவாதமலையை தரிசிக்கும் நோக்கில் அரபுநாடுகளில் இருந்து பல அறிஞர்களும், சூபி மகான்களும் இலங்கைக்கு வந்தனர். பாவாதமலையை தரிசிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த அறிஞர்கள் மற்றும் சூபி மகான்களில் சிலர் இலங்கையிலேயே தங்கினர். பிற்காலத்தில் அவர்கள் இங்கேயே அடங்கப் பெற்றனர். அரபுநாடுகளில் இருந்து இலங்கையின் பாவாத மலையை தரிசிக்க வந்தவர்களில், சிலர் இப்னுபதுாதா பயன்படுத்திய , அதாவது தெற்குப் பகுதியில் இருந்து பலாங்கொடை தப்தர் ஜெய்லானி ஊடான பாதையையும், சிலர் கொழும்பில் இருந்து கரவனல்ல-யடியந்தொட-கினிகத்தேன-ஹட்டன் ஊடான பாதையையும் பயன்படுத்தினர். அவ்வாறு இலங்கையின் பாவாதமலையை தரிசிக்கவந்து , பின்னர் இலங்கையில் தங்கியிருந்து வபாத்தான முக்கிய சூபி மகான் ஒருவராக அஷ்செய்ஹ் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்)

அவர்கள் கருதப்படுகின்றார்கள். அஷ்செய்ஹ் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்)அவர்கள் ருவன்வெல்ல பிரதேசத்தின் கொடியாகும்பர அம்பே பள்ளிவாசலில் அடங்கப் பெற்றுள்ளார்கள்.இவர்கள் பாவாதமலையை தரிசித்துவிட்டு வரும் வழியிலேயே மேற்படி கொடியாகும்பரவுக்கு வந்ததாக நம்பப்படுகின்றது. சீதாவக்கை இராஜதானியின் மன்னர்கள் அஷ்செய்ஹ் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு மரியாதை அளித்துச் சென்றதாகவும், சீதாவக்கையில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகள் அஷ்செய்க் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரத்துக்கு வந்து நேர்ச்சைகள், காணிக்கைகள் வழங்கிவிட்டு மரத்திலான தெப்பங்களின் மூலம் களனி கங்கை ஊடாக கொழும்புக்கு வியாபாரத்திற்கு சென்று வந்தாகவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீதாவக்கை இராஜதானி கி.பி. 1521 இல் உருவாக்கப்பட்டதுடன், கி.பி. 1594 இல் முற்றுப்பெற்றது. சீதாவக்கை இராஜதானியை மாயதுன்னை மற்றும் அவரது மகன் முதலாம் ராஜசிங்கன் ஆகிய இருவர் மாத்திரமே ஆட்சிசெய்தனர். சீதாவக்கை இராஜதானி மன்னர்கள் அஷ்செய்க் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு மரியாதை அளித்துச் சென்றனர் என்ற வரலாற்றுடன் ஒப்பிடும் போது, அஷ்செய்ஹ் அகீல் முஹம்மது வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம் ஏறத்தாள 500வருடங்கள் பழமையானது என்பதை ஊகிக்க முடியும். யெமனில் இருந்து இலங்கைக்கு வந்த அஷ்செய்ஹ் அஹ்மத் இப்னு முபாரக் மெளாலானா (றஹிமஹுல்லாஹ்) மற்றும் இமாமுஸ் ஸைலான் அஷ்செய்ஹ் முஸ்தபா இப்னு பாவா ஆதம் (றஹிமஹுல்லாஹ்)ஆகியோர் கி.பி. 1857ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்களின் ஸியாரத்தை தரிசிப்பதற்கு சென்றார்கள் என்று அவர்களது வரலாற்றுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் முக்கிய ஒரு ஆதரமாக இருக்கக்கூடிய ஸியாரங்களைப் பேணிப்பாதுகாப்பதும், அவற்றின் வரலாறுகளை ஒன்று திரட்டுவதும் காலத்தின் தேவையாகும்.

இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

No comments

Powered by Blogger.