புத்தள மாவட்டத்தில் 500 வருடங்கள் பழைமைவாய்ந்த கேரளா ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத் தளபதி குஞ்சாலி மரிக்கார் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸியாரம்
போர்த்துக்கேயருக்கு எதிராக போராடுவதற்காக வேண்டி, இலங்கையின் சீதாவக்கை இராச்சியத்தின் அரசன் மாயாதுன்னவின் அழைப்பேரில், இந்தியாவின் கேரளா ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத் தளபதியான குஞ்சாலி மரிக்கார் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வந்தார்கள். பொதுவாக ஸமோரின் இராச்சியத்தின் முஸ்லிம் கடற்படைத் தளபதிகள் குஞ்சாலி மரிக்கார் என அழைக்கப்பட்டனர். இவ்வகையில் ஸமோரின் இராச்சியத்தின் முஸ்லிம் கடற்படைத் தளபதிகள் நால்வர் இருந்துள்ளனர். இவர்களில் முதலாவது குஞ்சாலி மரிக்கார் அவர்களே, மாயதுன்னை மன்னனின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்தார்கள். இவர்களின் இயற்பெயர் குட்டியலி மரிக்கார் என்பதாகும். இவர்கள் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவராவார்.
போரத்துக்கேயருக்கு எதிராக புத்தளத்தை அண்டிய கடற்பகுதியில் நடைபெற்ற யுத்தம் ஒன்றில் ஷஹீதாக்கப்பட்ட இவர்கள் சிலபாத்தில் அமைந்துள்ள மலே பள்ளிவாசலில் (Mosque Garden) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். குஞ்சாலி மரிக்கார் அவர்களின் ஸியாரத்தில் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட மீதான் கல் (Tomb Stone) நடப்பட்டுள்ளது. இதில் அவர்களின் பெயர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வீரமரணமடைந்த இந்தியாவின் முதலாவது சுதந்திரப் பேராட்ட வீரராக இவர்களை சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஸமோரின் இராச்சியத்தின் முஸ்லிம் கடற்படைத் தளபதிகளான குஞ்சாலி மரிக்கார்களை கெரவிக்கும் பொருட்டு கேரளா அரசாங்கத்தினால் கோழிக்கூடு மாவட்டத்தின் இரிங்கல் எனும் கிராமத்தில் குஞ்சாலி மரிக்கார் அருங்காட்சியகமொன்று அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எனவே, இலங்கை வரலாற்றுடன் தொடர்புடைய குஞ்சாலி மரிக்கார் அவர்களின் ஸியாரத்தை பேணிப்பாதுகாப்பதும் எமது கடமையாகும்.

Leave a Comment