மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள 500 வருடங்கள் பழமையான ஸியாரங்கள்
மாத்தாறை மாவட்டத்தின் தெவிநுவரை மற்றும் கந்தறைக்கு இடையில் அமைந்துள்ள "வாவ்வ" என்ற இடத்தில், மேற்குறிப்பிட்ட ஸியாரங்கள் அமைந்துள்ளன. இவ்விரண்டு ஸியாரங்களும், காலியில் போர்த்துக்கேய தேசாதிபதியின் செயலாளராகக் கடமையாற்றிய முர்சி மரிக்கார் அவர்களின் இரண்டு மகள்மார்கள் உடையதாகும். பெரும்பான்மைமக்கள் வாழும் வாவ்வ என்ற ஊரில் அமைந்துள்ள இந்த இரண்டு ஸியாரங்களும் கட்டப்படாத நிலையில் உள்ளது. ஸியாரங்களுக்கு அடையாளமாக இரண்டு மீஸான் கற்கள்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்பமாகக் குடியேறிய பிரதேசங்களில் ஒரு இடமாக வெலிகமை காணப்படுகின்றது. வெலிகமையின் பாலத்தடியை (கோலேதண்ட) வதிவிடமாகக் கொண்ட முர்ஸி மரிக்கார் எனும் பெரியார், கி.பி. 1520ஆம் ஆண்டு காலியில் போர்த்துக்கேய தேசாதிபதியின் செயலாளராகக் கடமையாற்றினார். அவருக்கு மார்க்கப்பற்றுள்ள இரண்டு அழகிய மகள்மார்கள் இருந்தார்கள். அவர் தனது மகள்மார்களை அந்நிய ஆண்களில் கண்களில் இருந்து மறைந்து வளர்த்து வந்தார்கள். ஒருநாள் அதிகாலைப் பொழுது முர்ஸி மரிக்கார் அவர்களின் மகள்மார்கள் வீட்டு முன்றலில் உலாவிக் கொண்டிருந்ததை ,தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய ஒரு கூழித்தொழிலாளி தற்செயலாகக் கண்டான். அதனால் முர்ஸி மரிக்கார் அவர்களின் அழகான அந்த இரண்டு மகள்மார் பற்றிய செய்திகள் ஊர் முழுவதும் பரவியதுடன், அச்செய்தி காலியில் இருந்த பேர்த்துக்கேய தேசாதிபதியின் காதுகளுக்கும் எட்டியது. இவர்களில் ஒரு யுவதியை தனக்கு மணமுடித்துத் தருமாறு தனது செயலாளராக கடமையாற்றுபவரும், அவ்விரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையுமாகிய முர்ஸி மரிக்காருக்கு, பேர்த்துக்கேய தேசாதிபதி கட்டளை இட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத முர்ஸி மரிக்கார் மிகவும் கவலையடைந்தார். இதனை வெளிக்காட்டிக்கொள்ளாத அவர், தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருமாறு தேசாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். வீடடுக்குச் சென்ற முர்ஸி மரிக்கார் தனது மகள்மார்கள் இருவரிடமும்இதனை தெரிவித்தார். பின்னர் மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்குவந்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்துவிட்டு இரவோடு இரவாக தனது வீட்டில் இருந்து வெளியேறினார்கள். இரவும், பகலும் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் அலைந்து திரிந்து மாத்தறைக்கு அண்மித்த தெவிநுவர மற்றும் கந்தறைக்கு இடையில் அமைந்துள்ள "வாவ்வ" என்ற அடைந்த போது, முர்ஸி மரிக்காரின் இரண்டு மகள்மார்களும் நோய்வாய்ப்பட்டு உறுதியான ஈமானுடன் இவ்வுலகை விட்டு நீத்தார்கள். அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மேற்குறிப்பிடப்பட்ட தகவல் முன்னால் வட்டாரக் கல்வி அதிகாரியாக (C.E.O.) கடமையாற்றிய வெலிகமை பாலத்தடியைச் சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் அஹ்மத் அவர்களால் பதிவுசெய்யப்பட்டதாகும். வாவ்வ என்ற இடத்தில் அமைந்துள்ள ஸியாரம் தொடர்பாக " மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் " என்ற புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறத்தாள 50வருடங்களுக்கு முன்னர், இவ்விடத்தில் கந்துாரி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக அறியக்கிடைத்தது. எனினும், காலப்போக்கில் அவ்விடத்துக்கு முஸ்லிம்கள் செல்வது மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அங்கு முஸ்லிம்களின் வரலாற்றுடன் தொடர்பான ஒரு இடம் இருப்பதும் பலர் அறியாமல் இருப்பதாகவும், வெகுசிலரே தற்போது அவ்விடத்தை அறிந்து வைத்துள்ளதாகவும் அறியக்கிடைத்தது. முன்பு அங்கு காணப்பட்ட இரண்டு மக்பராக்களுக்கும் மீஸான் கற்கள் பதிக்கப்பட்டிருந்ததோடு, தற்போது ஒரு மக்பராவில் மாத்திரமே இரண்டு மீதான் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. அவ்விடத்திற்கு அருகில் ஒரு மண்பாதை காணப்படுவதோடு, அப்பாதையை அகலப்படுத்தும் போது அடுத்த மக்பராவின் ஒருபகுதியும் பாதைக்கு சென்றுள்ளதுடன், அதனால் அம்மக்பராவில் காணப்பட்ட மீதான் கற்கள் கலட்டப்பட்டு அருகில் போடப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்தது. எனவே, முஸ்லிம்களின்இருப்பியலுடன் தொடர்புபட்ட இவ்வாறான இடங்களை இணங்கண்டு பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.
தகவல் மற்றும் படஉதவி - மொஹமட் ராபித் (Mohamed Rafidh )
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

Leave a Comment