கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 700 வருடங்கள் பழமைவாய்ந்த பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம்
இலங்கையின் பாவாதமலையை தரிசிப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து பல மகான்கள் வருகை தந்தார்கள். அந்த வரிசையில் 14ஆம் நுாற்றாண்டில் ஈராக் நாட்டில் இருந்து பாவாதமலையை தரிசிக்க வந்த ஒருவரே பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஆவார்கள். இவர்களின் அடக்கஸ்தளம் கம்பளையின் கஹடபிடிய நகரில் அமைந்துள்ளது.
பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர் எஸ்.எஸ்.எம். நாணயக்கார அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்று 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஆங்கிலப் பத்திரிகையொன்றில் 'A 14th Century Sinhala King's Gift to a Muslim Saint' என்ற பெயரில் வெளியாகியது. அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களும், அவர்களது 03 தோழர்களும் பாவாதமலையை தரிசிப்பதற்காக வேண்டி கி.பி. 1344 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்கள். பாவாதமலையை தரிசிப்பதற்காக வேண்டி வெளிநாட்டவர்களை கூட்டிச்செல்லும் வழமையான பாதை அல்லாத பாதையின் ஊடாக, அதாவது கம்பளை நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் துாரத்தில் காணப்பட்ட மகாவலி கங்கையின் ஊடான பாதையில் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் குழுவினரை உள்நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவன் கூட்டிச்சென்றான். அப்பிரதேசத்தின் இயற்கை அழகால் கவரப்பட்ட பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள், எதிர்காலத்தில் குறித்த இடத்தில் தனது தங்குமிடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். அதன் அடிப்படையில் பாவாதமலையை தரிசித்துவிட்டு வரும்வழியில் குறித்த இடத்தில் அமைந்துள்ள கித்துல் மரத்தடியில் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்கி, ஆழ்ந்த வணக்கத்தில் ஈடுபட்டார்கள். பின்னர், பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்கியிருந்த கித்துல் மரத்திற்கு அருகில் ஒரு வேலை நிமித்தம் அரச மாளிகையில் பணியாற்றும் சேவகன் ஒருவன் வந்தான். அச்சேகவனுக்கு அவ்விடத்தில் அதிசமான நிகழ்வொன்று நடைபெற்றது. இதுபற்றி அக்காலத்தில் கம்பளை நகரை ஆட்சிசெய்த 4ஆம் புவனேகபாகு மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், அவ்விடத்திற்கு வந்த மன்னன் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒரு பெரிய மகான் என்பதை அறிந்ததன் பிற்பாடு, அப்பகுதியிலிருந்த பெரிய நிலப்பகுதியை பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு பரிசாக வழங்கினான். பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அவ்விடத்தில் சிறிது காலம் வாழ்ந்து மரணித்தன் பின்னர் அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். 4ஆம் புவனேகபாகு மன்னனால் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட பிரதேசம் சக்கரவத்த என அழைக்கப்பட்டது. இப்பிரதேசமானது முன்பு பொடலகம அல்லது பொடலபிடிய என்ற அழைக்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. இந்த பொடலகம அல்லது பொடலபிடிய என்று அழைக்கப்பட்ட பிரதேசமே, இப்போது கஹடபிடிய என அழைக்கப்படுகின்றது. இலங்கையின் நீதியரசராகக் கடமையாற்றிய சேர் அர்சிபேல்ட் கெம்பல் லொவ்ரி அவர்களால் மத்திய மாகாணம் தொடர்பாக எழுதப்பட்ட புவியியல் அகராதியில் (Gazetteer), கஹடபிடியவின் புகழ்பெற்ற பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் பாவா கூபி வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம் மக்களால் 'மக்கன் சோகன்கேய'
என அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புவியியல் அகராதி 1896ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு ஆதாரமாக விளங்கும்
இவ்வாறான ஸியாரங்களைப் பாதுகாப்பது நம்மனைவரினதும் கடமையாகும்.

Leave a Comment