இலங்கை முஸ்லிம்களின் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய முன்னோடிகள்
19ஆம் நுாற்றாண்டில் இலங்கையின் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஆரம்பமானது. அந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறையில் மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) ,அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி றஹிமஹுல்லாஹ் (பாதிப் மெளாலானா) அவர்களின் ஆன்மீக மாணவர்கள் ஆவர்.
![]() |
| அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஸியாரம் |
அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் யமன் நாட்டைச் சேர்ந்தவர். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்திசெய்த இவர்கள் இலங்கைக்கு வந்தார்கள். இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று சன்மார்க்கப் பணிகளில் ஈடுபட்டார்கள். இக்காலப் பகுதியிலேயே அறிஞர் சித்திலெப்பை மற்றும்
வாப்பிச்சி மரிக்கார் ஆகியோரை சந்தித்தார்கள். இலங்கையில் முதலாவது முஸ்லிம் பாடசாலையாகக் கருதப்படும் கொழும்பு ஸாஹிராக் கல்லுாரியை அமைப்பதற்கு அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோருக்கு அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இலங்கையின் பல பாகங்களில்
பாடசாலைகளை அமைப்பதற்கு, இவர்கள் இருவருக்கும் பாதிப் மெளலானா அவர்கள் துணையாக இருந்தார்கள். தனது ஆன்மீக வழிகாட்டியான அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றி அறிஞர் சித்திலெப்பை தனது "அஸ்றாறுல் ஆழம்" என்ற நுாலில் குறிப்பிடுகின்றார்கள். அக்காலப்பகுதியில் பெரும் செல்வாக்குள்ள ஒருவராக வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் இருந்தார்கள். இலங்கையின் தேசிய அருங்காட்சியகம் ( Colombo National Museum )உட்பட பல பிரபல்யமான கட்டங்களை ஆங்கிலேய கட்டடக் கலையமைப்புடன் நிர்மாணித்த பெருமை வாப்பிச்சி மரிக்கார் அவர்களைச் சாரும். அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது இறுதிக் காலத்தை கஹட்டோவிட்டவில் கழித்தார்கள்.
வாப்பிச்சி மரிக்கார் அவர்கள் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்திப்பதற்காக கொழும்பில் இருந்து எமது கஹட்டோவிட்ட கிராமத்துக்கு வரும் வழமை காணப்பட்டது. மருதானை ரெயில் நிலையத்தில் ஏறி கஹட்டோவிட்டவுக்கு வரும் போது வெயன்கொட ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தாமல் பயணித்தது. தனத அதிகாரத்தைப் பயன்படுத்தி வெயன்கொட ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தச் செய்தார். அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்திப்பதற்காகவும், அவர்களிடம் கற்பதற்காகவும், எமது ஊருக்கு கொழும்பில் இருந்து வருவோருக்கு வெயன்கொட ரெயில் நிலையத்தில் இறங்குவதற்கான ஏற்பாடு இருக்கவில்லை. உடனடியாக வாப்பிச்சி மரிக்கார் அவர்கள அன்றைய ஆளுனர் "வில்யம் கிரகரி" அவர்களை சந்தித்து சகல ரெயில்களும் வெயன்கொட ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினார். அன்று முதல் இலஙகையின பிரதான ரெயில் பாதையில் உள்ள வெயன்கொட ரெயில் நிலையத்தில் சகல ரெயில்களும் நிறுதப்பட்டன. வெயன்கொட ரெயில் நிலையம் உருவாவதற்கான காரணமே வாப்பிச்சிமரிக்கார் ஆவார்கள். இதேபோன்று வாப்பிச்சிமரக்கார் அவர்களின் பேரர் சேர் ராஸிக் பரீத் அவர்களே இலங்கையில் பெண்களுக்கான பாடசாலைகளை ஆரம்பித்தவர்களாவர்.
அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் போன்ற ஆளுமையுள்ள தலைவர்களை உருவாக்குவதற்கு அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வழிகாட்டுதல்கள் பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும். கல்வித்துறையில் மாத்திரமின்றி இஸ்லாமிய ஆன்மீகத்துறைக்கும் அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) பெரும் பங்காற்றினார்கள். அஷ்செய்க் அப்துல் காதிர் ஜீலானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இவர்கள் இருந்தார்கள். இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு பங்காற்றிய அறிஞர்களில் ஒருவராக அஷ்செய்க் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்படுவதாக கலாநிதி சுக்ரி அவர்கள் தனது " Muslims of Sri Lanka: Avenues to Antiquity " என்ற நுாலில் குறிப்பிடுகின்றார்.
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)



Leave a Comment