சுல்தான் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் :12ஆம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறிய யெமன் சுல்தான்

 


இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்பமாக குடியேறிய இடங்களில் மிக முக்கிய இடமாகக் கருதப்படுகின்ற பேருவளை நகரின் கெச்சிமலைப் பள்ளிவாசலில் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்களின் ஸியாரம் அமையப் பெற்றுள்ளது.

சுல்தான் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்களும் அவர்களது ஐந்து சகோதரர்களும், ஒரு சகோதரியும் யெமன் நாட்டின் ஹளரமெளத் பிரதேசத்தில் இருந்து இலங்கையின் பேருவளை துறைமுகத்திற்கு வந்தார்கள். இவர்கள் யெமனின் பண்டைய தலைநகரான ஏடனைச் சேர்ந்த அரச குடும்பத்தினர்கள் ஆவார்கள். இவர்கள் இலங்கைக்கு 12ஆம் நுாற்றாண்டு காலப்பகுதியில் வந்ததாக வரலாற்று தகவல்கள் குறப்படுகின்றன. இவர்கள் பேருவளையை வந்தடையும் போது, அதாவது கி.பி. 1274இல் பேருவளை மாளிகாஹேனையை வரப்பிரசாதி இராஜினி என்ற அரசன் ஆட்சிசெய்து கொண்டிருந்தார். அரசினின் விருந்தினராக சிறிதுதுகாலம் அரண்மையில் இவர்கள் தங்கினார்கள். பின்னர், அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்கள் இறைதியானத்தில் ஈடுபடும் பொருட்டுகெச்சிமலையில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார்கள். அங்கு தமது இறைத்தியானப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்கள் மரணமடைந்தன் பின்னர் அவர்களது சகோதரர்களால் அவ்விடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்கள் மரணமடைந்து பல ஆண்டுகளின் பின்னர் பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலின் கதீப் செய்கு யூசுப் அவர்கள் கெச்சிமலைக்கு பகுதிச் சென்றார்கள். அப்போது அப்பிரதேசம் காடுகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. அப்பிரதேசத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது செய்கு யூசுப் அவர்களின் காலில் முள் ஒன்று தைத்தது. ஓய்வெடுக்கும் பொருட்டு ஒரு மரத்தின் கீழ் சாய்ந்த செய்கு யூசுப் அவர்களுக்கு சிறிது துாக்கம் ஏற்பட்டது. துாக்கத்தின் போது அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். கனவில் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்கள் தோண்றி,தான் இந்த பிரதேசத்திலே அடக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். அதன் பின்னர் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம், கதீப் செய்கு யூசுப் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தில் ஒரு குடிசை அமைத்து, தொழுவதற்காக ஒரு பள்ளிவாசலையும் அமைத்தார்கள்.

ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்ட காலப்பகுதியில் அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்களின் ஸியாரத்தை மக்கள் தரிசித்து வந்தார்கள். அக்காலப்பகுதியில் பள்ளிவாசல் மற்றும் ஸியாரம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு சேதம் விளைவிப்பதற்காக சில ஒல்லாந்து இராணுவீரர்கள் முயற்சி செய்தார்கள். அப்போது சில அறியப்படாத அச்சமடையச் செய்யும் தோற்றத்தைக் கொண்ட ஒருவர் தோண்றி ஒல்லாந்து இராணுவவீரர்களை விரட்டியடித்தாகக் கூறப்படுகின்றது. 


1882ஆம் ஆண்டு இலங்கையின் பிரித்தானிய ஆளுநராகக் கடமையாற்றிய சேர் ஆதர் கோர்டன் அவர்கள் ஒருமுறை காலி நகருக்கு தனது குதிரையில் சென்றுகொண்டிருக்கும் போது பேருவளைப் பகுதியில், அவரது குதிரை நகர மறுத்தது. பின்னர், தனது குதிரையை அதன் திசையிலேயே செல்ல ஆளுநர் அவர்கள் விட்டுவிட்டார்கள்.இறுதியில் அது அஷ்செய்க் அஷ்ரப் வலீயுல்லாஹ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கெச்சிமலைப் பள்ளிவாசலின் அருகில் சென்று படுத்துக்கொண்டது. குதிரையினைத் தொடர்ந்து ஆளுநர் அவர்களும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். குறித்த நிகழ்வு ஆளுநர் அவர்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பிரித்தானிய ஆளுநர் சேர் ஆதர் கோர்டன் அவர்கள் காலிக்கு செல்லும் போது கெச்சிமலைப் பள்ளிவாசலை தரிசித்துச் செல்வதை வழமையாக்கிக் கொண்டார்கள். அத்துடன், கெச்சிமலைப் பள்ளிவாசல் அமைந்திருக்கும் காணியை உத்தியோகபூர்வமாக பள்ளிநிர்வாகத்திற்கு கையளித்தார்கள். மர்ஹும் அஷ்செய்க் முஹம்மத் ஹம்ஸா ஆலிம் பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காணி உறுதிப்பத்திரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாமியக் கட்டிடக்கலை அமைப்புடன் கட்டப்பட்டுள்ள தற்போதைய பள்ளிவாசல் 1911ஆம் ஆண்டு முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் அமைக்கப்பட்டது. கெச்சிமலைப் பள்ளிவாசல் கட்டிடம் (ஸியாரம் அமைந்துள்ள பகுதி உட்பட) , 2015 ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின் ஊடாக பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் தளமாகக் பிரகடணப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

ஆக்கம் - © இப்ஹாம் நவாஸ்

No comments

Powered by Blogger.