செய்ஹ் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ்
16ஆம் நுாற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞராக நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கருதப்படுகின்றார்கள். தாய் வழியிலும், தந்தை வழியிலும் இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழித்தோண்றலைச் சேர்ந்த இவர்கள், காதிரிய்யா வழியமைப்பின் செய்காக காணப்பட்டார்கள்.
நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு 404 சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் தனது சீடர்களுடன் ஹிஜாஸ், ஈராக்,ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்றார்கள். அவர்களது பயணத்தின் போது பல இடங்களில் தங்கிநின்று சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டார்கள். வட இந்தியாவுக்கு விஜயம் செய்த நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அங்கு வனாந்தரப் பகுதிகளில் வாழ்ந்த ஷீஆப் பிரிவைச் சேர்ந்த பலரை அஹ்லுஸுன்னாஹ் கொள்கைக்குள் கொண்டு வந்தார்கள். சீனாவுக்கு சென்ற நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், அங்கு வாழ்ந்த தாத்தாரியர்கள் பலரை இஸ்லாத்தின் பால் இணைத்தார்கள்.
16ஆம் நுாற்றாண்டில் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை மற்றும் தென் இந்தியா என்பன வந்ததன் பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பாதிக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் தீனுல் இஸ்லாத்தை பாதுகாத்த முக்கியமான ஒருவராக நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறியப்படுகின்றார்கள். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கு அவர்களது மாணவர்களை இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளுக்கு நியமித்து தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவரான குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் மாயதுன்னை மன்னனின் அழைப்பை ஏற்று, போர்த்துக்கேயருக்கு எதிராக போராடுவதற்கு பல தடவைகள் இலங்கைக்கு வந்தார்கள். போர்த்துக்கேயருக்கு எதிரான கடற்போர்களில் போர்த்துக்கேயரின் பல கப்பல்களை குஞ்சாலி மரிக்காரின் படையினர் அழித்தது. ஒருமுறை புத்தளம் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் நடைபெற்ற போரில் போர்த்துக்கேயரின் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட குஞ்சாலி மரிக்கார் அவர்கள் இலங்கையின் சிலாபம் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
404 சீடர்களில் ஒருவரான காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்ஹ் ஸதக் இப்ராஹீம் மரிக்கார் அவர்கள் குஞ்சாலி மரிக்காரினது படையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்டதோடு, போர்த்துக்கேயருக்கு எதிராக இந்தியாவின் தென்கடலில் நடந்த யுத்தமொன்றில் மெனுவல் டீ சூசா என்ற போர்த்துக்கேய தளபதியின் கப்பலை மூழ்கடித்தார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் தீனுல் இஸ்லாத்தை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்ட மகான் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மக்பரா தமிழ்நாட்டின் நாகூரில் அமைந்துள்ளது.
படம் 1 - நாகூரில் அடங்கப்பெற்றிருக்கும் நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தளத்தில் அமைந்துள்ள மினாராக்கள்
படம் 2 - இலங்கையின் சிலாபம் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள குஞ்சாலி மரிக்கார் அவர்களின் மக்பரா
தொகுப்பு - இப்ஹாம் நவாஸ் அல்-காதிரி


Leave a Comment