இலங்கையில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களை அமைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகான் : இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

 

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞராவார். காதிரிய்யா தரீக்காவின் செய்ஹாக இருந்த இவர்கள், காதிரிய்யா தரீக்காவின் உப பிரிவான அரூஸிய்யத்துல் காதிரிய்யா எனும் வழியமைப்பை தோற்றுவித்தார்கள். கீழக்கரை தைக்கா சாஹிப் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் மாணவராக கற்றார்கள்.

அஷ்செய்க் தைக்கா ஸாஹிப் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக கேரளா,தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சென்றார்கள். இதனால் ,19ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் கேரளா,தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுவர்களாக காணப்பட்டார்கள். இன்றளவும் இலங்கையில் பல பகுதிகளில் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள் காணப்படுவதோடு நுாற்றுக்கணக்கான தைக்காக்கள் சிறப்பான முறையில் இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் கரையோர நகரங்களான காயல்பட்டிணம் மற்றும் கீழக்கரை போன்ற இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள், போர்த்துக்கேய காலநித்துவ ஆட்சியின் போது ( கி.பி. 1501-1575) கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இலங்கையில் போர்த்துக்கேய காலநித்துவ ஆட்சியின் போது (கி.பி. 1505 முதல் 1658 வரையான காலப்பகுதியில்), இலங்கையின் கரையோரப் பகுதிகளில் காணப்பட்ட ஏறத்தாள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளச் சின்னங்களையும் போர்த்துக்கேயர்கள் அழித்தார்கள். அக்காலப் பகுதியில் இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மார்க்கக் கடமைகளைக் கூட சரியான முறையில் நிறைவேற்ற சந்தர்ப்பம் மறுக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். போர்த்துக்கேயருக்கு பின்னர் வந்த ஒல்லாந்து ஆட்சிலும் இது நீடித்தது.
ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கை முஸ்லிம்களுக்கு சிறிது சுதந்திரம் கிடைக்கப்பெற்றது.

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் கடுமையாக பாதிப்படைந்திருந்த இலங்கை முஸ்லிம்களின் நிலையினை மாற்றுவதிற்கு
கடுமையாக உழைத்தார்கள். அவ்வகையில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அக்காலப்பகுதியில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தவாதியாக அவர்கள் காணப்பட்டார்கள். இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இலங்கையில் நுாற்றுக்கணக்கான பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் கி.பி. 1848இல் தோற்றுவிக்கப்ட்ட நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இலங்கையில் 350இற்கும் அதிகமான பள்ளிவாசல்களும், அர்வி பாடசாலைகளும் அவர்களால் கட்டப்பட்டது. இந்தியாவிலும் பல பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் அவர்களால் கட்டப்பட்டது. பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்தவர்கள் பற்றிய தகவல்களை அரபுக் கவிதைகளை இயற்றி அதன் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கையின் முஸ்லிம்கள் வரலாற்றில் நிறுவன ரீதியாக அமைக்கப்பட்ட முதலாவது அரபுக்கல்லூரியான வெலிகம பாரி அரபுக் கல்லூரி கி.பி. 1884 ஆம் ஆண்டு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் போக்குவரத்து மிகக்குன்றிய அக்காலப்பகுதியில் மறுசுக்கட்டி மற்றும் கரடிக்குழி போன்ற தொலைத்துாரப் பகுதிகளுக்குச் செல்வது மிகவும் கஷ்டமாக இருந்தோடு, வனவிலங்குகளின் ஆபத்தும் காணப்பட்டது. எனினும், அவ்வாறான பகுதிகளுக்கு இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சென்று பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். மரிசுக்கட்டிப் பகுதியில் வில்பத்து வனாந்தர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பழமையான பள்ளிவாசலும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு : இப்ஹாம் நவாஸ் அல்-காதிரி (Ifham Nawas Al-Qadiri)

No comments

Powered by Blogger.